அப்பன் குடிகாரனா இருக்கலாம் ,கூத்திக்கள்ளனா இருக்கலாம்,கூட்டி/காட்டி கொடுக்கிறவனா இருக்கலாம். ஆனால் அம்மா மட்டும் பத்தரை மாத்து தங்கமா இருக்கனும்.
குடிச்சே லிவர் வீங்கி கிடந்த அப்பனை கல்யாணம் கட்டி – மறுமாசமே வயித்துல பிள்ளை வாங்கி மறு மாசமே தாலி அறுத்தாலும் அந்த அம்மாக்காரி மட்டும் இட்லி சுட்டு ,நாலு வீட்ல பத்து பாத்திரம் தேய்ச்சு பிள்ளைய வளர்க்கனும்.
பிள்ளை பெரியவனாகி அம்மாவுக்கு பகவத்கீதையும்,சால்வையும்வாக்கிங் ஸ்டிக்கும் மட்டும் வாங்கி தருவான். ஒரு வேளை அவள் வேறு ஏதேனும் அழுத்தம் காரணமாகவோ – உயிரியில் தேவைகள் காரணமாகவோ எவனுடனாவது படுத்தாள் என்று தெரிந்தால் அந்த பாசக்கார பய கொலைகார பயலாகிருவான்.
ஆனால் இந்த நெடுங்கதையில மிகை இல்லாத “யதார்த்தமான” தாயையும் –மகனையும் உலவவிட்டிருக்கேன்.
அவள் ஒரு திராவிட பெண். பெரியாரை உள் வாங்கி கொண்டவள். வறுமையை உழைப்பால் வென்றவள். ஆனால் சாதீயம் அவளை சமாதி ஆக்க பார்க்கிறது. அதிலிருந்தும் மீண்டு வருகிறாள்.
ஆற்றில் நீந்திக்கொண்டிருந்த அயிரை மீனை அரபிக்கடலில் வீசியதை போல் காலம் அவளை பெரும் பொருளாதார சிக்கலில் ஆழ்த்துக்கிறது .
மகனை ஆளாக்கி –அவன் தொழில் சாம்ராஜ்ஜியத்துக்கு வித்தாகி கட்டி எழுப்புகிறாள். மகனோ அவள் சிறகுகளை வெட்டுகிறான்.தங்க கூண்டில் அடைக்கிறான். அதில் இருந்து விடுதலை பெற மருகி கொண்டிருக்கையில் மதவாதம் அவளை,அவள் மகனை மண்ணில் போட்டு மிதிக்கிறது. புதைக்க பார்க்கிறது.
அவள் மாண்டாளா? மீண்டாளா ? என்பதே கதைக்கரு.