காதல் என்பதை பற்றி நாம் ஏராளமான கற்பிதங்களையும், நம்பிக்கைகளையும் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட அனுபவங்களை சார்ந்து அதன் மீதான புனிதப்படுத்தலோ அல்லது சிறுமைப்படுத்தலோ இங்கு நிகழ்கிறது. இந்த சமூகத்தில் காதல் அளவிற்கு வேறு எதுவும் அத்தனை புனிதப்படுத்தப்பட்டதும் இல்லை, சிறுமைபடுத்தப்பட்டதும் இல்லை. நாம் கொண்டிருக்கும் இந்த கற்பிதங்கள் அத்தனையும் காதல் தொடர்பாக நாம் கொண்டிருக்கும் தெளிவற்ற புரிதலின் வெளிப்பாடு மட்டுமே.
உண்மையில் காதல் என்பது விடுதலை. மானுட விடுதலையை காதலின் வழியாகவே நாம் அடைய முடியும் என்பதை வரலாற்றை திரும்பிபார்க்கும் போது நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்த புத்தகத்தில் உள்ள இரண்டு சிறுகதைகளின் மையம் காதலே. ஆனால் நாம் இதுவரை பார்த்துவந்த மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்கள் எதுவுமில்லாத சூழ்நிலை சார்ந்து வெளிப்படும் யதார்த்த உணர்வாகவே இதில் காதல் இருக்கிறது. காதல் என்ற சொல்லை உணர்வுப்பூர்வமான ஒன்றாகவே நாம் நினைத்து வந்திருக்கிறோம் ஆனால் யதார்த்த வாழ்வில் அது எல்லா நேரமும் அப்படி வெளிப்படுவதில்லை. வாழ்க்கை என்பதன் மிக நீண்ட பாதையில் காதலுக்கு எப்போதும் இடமுண்டு, உண்மையில் அதுவே அந்த நீண்ட பாதை முழுக்க நம்மை கையை பிடித்து கூட்டி செல்கிறது. அப்படிப்பட்ட புரிதல் மிகுந்த அன்பை தான் இந்த கதைகளில் நீங்கள் உணரமுடியும்.