ஜாதி மத பேதங்கள் மூட வழக்கங்கள், தாங்கி நடைபெற்று வரும் சண்டை உலகினை ஊதையினில் துரும்பு போல் அலைக்கழிப்போம்; பின்னர் ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்! என்ற உயரிய கோட்பாட்டில் 1926-இல் தந்தை பெரியார் தலைமையில் உருவான தன்மான இயக்கத்தின் போர் வாளாகத் திகழ்ந்தது நகர தூதன் இதழாகும்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொடக்க காலப் படைப்புகள் பல நகரதூதன் இதழில் வெளிவந்துள்ளதாக அறிந்தேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்பற்றி நான் ஆய்வு செய்யத் தொடங்கிய காலத்தில் அவ்விதழைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டேன். திருச்சியில் அவர் வாழ்ந்த வீட்டுக்குச் சென்றேன். திராவிட இயக்கத் தோழர்களைச் சந்தித்தேன். மணவை திருமலைசாமி அவர்களின் மகன் சிவாஜி அவர்களோடு தொடர்பு கொண்டேன். ஆயின் என் முயற்சி கைகூடவில்லை. இறுதியாக அவ்விதழ் தொகுப்புகள் பெரியார் பகுத்தறிவு நூலகத்தில் இருப்பதை அறிந்தேன். வறுமையில் வாடிய ஒருவனுக்குப் பசியாற நல்லுணவு கிடைத்ததைப் போல் அவ்விதழ்த் தொகுப்புகளைக் கண்டவுடன் மகிழ்ந்தேன்.