ஆசிரியரைப் பற்றி பார்வையற்றவன் என்னும் புனைப்பெயரில் எழுதிவரும் பொன்.சக்திவேல், புதுக்கோட்டை மாவட்டம் சண்முகநாதபுரத்தைச் சேர்ந்தவர். பிறவியிலேயே பார்வையை இழந்த இவர், தற்போது காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் பயின்று வருகிறார். மேலும் பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழான விரல்மொழியர் இதழின் இணை ஆசிரியராகவும் உள்ளார். மேடைப்பேச்சு, பாடல் பாடுதல், கவிதை எழுதுதல், கட்டுரை எழுதுதல், விளையாட்டு வீரர் என பன்முகத் திறமை கொண்டவர்.
இது இவரது இரண்டாவது நூல். நூலைப்பற்றி:
மாற்று உரை தொழில்நுட்பம் என்றால் என்ன! அங்கே அனைத்து உள்ளடக்கங்களுமென்றால் அனைத்துந்தான். நீங்கள் ரம்யா பாண்டியனை கொண்டாடும் போது விசயம் தெரியாமல் நாங்கள் தேமேன்னு இருந்தோம்.
பார்வையற்றவர்கள் என்ற சொல்லைக் கேட்கும் போதே உங்களுக்குள் கருணை பிறக்கும், உங்கள் மனம் துயரத்தில் கசிந்துருகும். அவற்றோடு அவர்களது திறமைகளைக் காணும்போது, அதுகூட வேண்டாம் அவர்களது இயல்பான செயல்பாடுகளைக் காணும்போதே, உங்களுக்கு வியப்பு மேலிடும். பார்வையற்றோர், அவர்களால் உங்களுக்குள் பிறக்கும் துயரம், கருணை, வியப்பு இதுதான் இன்று வெற்றிகரமான பொருளீட்டும் சூத்திரமாகத் திகழ்கிறது.
உதாரணமாக ஊடகத் துறையை எடுத்துக் கொள்வோம். ஒரு பார்வை மாற்றுத்திறனாளியின் பாடலை கேட்டதும் சில்லறைகளைச் சிதற விட நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட காட்சி ஊடகங்கள், ஒவ்வொரு ரியாலிட்டி ஷோவிலும் ஒரு பார்வை மாற்றுத்திறனாளியைப் பங்கேற்பாளராகச் சேர்த்துக்கொள்கிறது. அவர்களது ரேட்டிங் உயர்வதற்காக சில சுற்றுகளுக்கு அவர் முன்னிலைப் படுத்தப் படுவார். இதுதான் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அம்மேடைகளில் மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்தெல்லாம் நாடகங்கள் அரங்கேற்றப்படும். ஆனால், அவர்களது ஊடகங்களில் ஒருபோதும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்குப் பணி வாய்ப்பு அளிக்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை பார்வை மாற்றுத்திறனாளிகள் ஒரு ரேட்டிங்கிற்கான காட்சிப்பொருள் மட்டுமே என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.
இவர்களுக்குப் பல தசாப்தங்களுக்கு முன்னரே, இச் சூத்திரத்தைப் பொருளீட்ட வெற்றிகரமாகப் பயன்படுத்தியவர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும் தொண்டு நிறுவனங்கள். இத்தகைய அமைப்புகளைப் பார்வை மாற்றுத்திறனாளிகளும் தொடங்கி நடத்தி வருகின்றனர். விழிச்சவாலர்கள் வாழ்வில் இவ்வமைப்புகள் ஏற்றங்களையும் மாற்றங்களையும் கொண்டு வந்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வமைப்புகளின் மறுபக்கத்தைப் பேச வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அழகான கட்டட அமைப்பு, கணினி கூடம், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இவை போதும் வெளியிலிருந்து வருபவர் அந்நிறுவனம் சிறப்பாக இயங்குகிறது என நம்ப. அதற்குப் பின்னால் நடக்கும் மாணவர்கள் மீதான சுரண்டல்கள் சூழ்ச்சிகள் போன்றவற்றைத்தான் “நூதன பிச்சைக்காரர்கள்” எனும் இந்நாடகம் பேசுகிறது. இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கதை அல்ல. பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒடுக்கப்படும் பல நிறுவனங்களின் கதை.
தொடர்பிற்கு
மின்னஞ்சல்: [email protected]
கைபேசி: 9159669269