அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு விழா 2019 மார்ச்சில் தொடங்குகிறது. அம்மா, அன்னையார், மணியம்மையார் என எப்பெயரிட்டு விளித்தாலும் தமிழ்ச் சமுதாயத்தின் நெஞ்சில் நிலைத்திருக்கும் திருவுருவம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் எனும் தொண்டறச் செம்மலின் தியாகத் திருவுருவம்தான்.
அன்னையார் மறைந்து 40 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
அவருடைய நினைவு, தந்தை பெரியாரின் பெயர் நிலைத்திருக்கும் ஆயிரம், ஆயிரமாண்டுக் காலத்திற்கும் நிலைபெற்றிருக்கும்.
அவருடைய வாழ்வு 58 அகவையில் தொண்டின் பயனாலேயே முடிந்து விட்டாலும் நீண்ட காவியமான வாழ்வு. அதனைக் குறுஞ்செய்திகளாக; அவர் வாழ்க்கைக் கடலில் பொறுக்கி எடுத்த முத்துக்களாகத் தொகுத்து அளிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். பேறு பெற்றதாக மகிழ்கிறோம். மலையைச் சிமிழுக்குள் அடக்கிவிட முடியுமா?
முயன்று, முயன்று தொகுத்துப் படைத்திருக்கும் இக் குறுஞ் செய்திகள் அன்னையார் வாழ்க்கைத் தேரின் முன் செல்லும் குதிரைகளின் ஓட்டம்.