இந்த இதழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பிதழாக வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசியல் வாழ்க்கை நெடியது. 14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.கவில் தொடங்கி, மிசாவில் கைதாகி சிறையில் சித்ரவதைக்கு உள்ளாகி அரசியல் வாழ்வை தொடங்கியவர். தியாகத்தால் புடம் போட்ட தங்கமாய் ஜொலிப்பவர். அண்ணாவின் கொள்கை தீபத்தை ஏந்தி சென்னையில் இருந்து காஞ்சிவரை ஓடிச்சென்று கலைஞர், எம்ஜிஆர் அவர்களின் முன்னிலையில் ஒப்படைத்தவர். தி.மு.கவில் இளைஞர் அணி எனும் பேரணியை தொடங்கிவைத்து இயக்கத்துக்கு இளைஞர் பால் கொண்ட நாட்டத்தை வெளிக்காட்டியவர். 1984 ல் இருந்து சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடுபவர். 1996 ல் சென்னை மேயராக மக்களால் மிகப்பெரிய வெற்றியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை மாநகரை சிங்கார சென்னையாக மாற்றிக்காட்டியவர். சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ வாக, உள்ளாட்சி துறை, ஊராகவளர்ச்சி துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியவர். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் கீழான நிலைக்கு காரணமான ஆளும் கட்சியை ஆளும் எதிர்க்கட்சி தலைவராக வலம் வருபவர். 2016 ல் நூலளவில் ஆட்சியை இழந்த தளபதி மு.க.ஸ்டாலின் 2019 ல் பாசிசத்திற்கு எதிரான யுத்தத்தில் மதவாதத்தை அண்ட விடாமல் ஓட ஓட விரட்டி தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றியை பெற்றவர்.
இதோ 2021 தேர்தல் வந்துவிட்டது. தமிழ்நாட்டு இருளை அகற்ற வரும் உதயசூரியனாய் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறார், ஓய்வறியா சூரியன் கலைஞரே “உழைப்பு உழைப்பு உழைப்பு” என்று பாராட்டிய மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டிற்கான விடிவு பிறக்கட்டும். இனி தான் ஆரம்பம்!