திராவிட வாசிப்பு மின்னிதழின் நான்காம் மாத இதழ் இது.
குடியுரிமை சட்டம் என மத்திய அரசு ஒன்றை கொண்டுவந்து, அதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெறும் காலக்கட்டம் இது. இந்த இதழில், குடியுரிமை சட்டம் என்றால் என்ன? என்று மருத்துவர். மயிலன் எழுதிய கட்டுரை வெளியாகி இருக்கிறது. வடநாட்டில் எழும் திராவிடக்குரல் சமீபகாலத்தில் தெளிவாகவே கேட்கிறது. பெரியாரின் பெயர் அங்கே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. அதை வைத்து தோழர். கதிர் ஆர்.எஸ். விரிவான ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.
மார்கழி மாத கச்சேரிகள் என சபாக்களை நிரப்பும் ஊரில், இந்த மார்கழியில் புத்தக மழை பொழிகிறது. கிண்டியில் திராவிட எழுத்தாளர்கள் எழுதிய 50 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியாகி வாசகர்களால் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த நிலையில், கிண்டில் எனும் இலக்கியபுரட்சி என எழுத்தாளர் சென் பாலன் எழுதிய கட்டுரையும், மாறிவரும் எழுத்துலகம் என தோழர். அசோக்குமார் ஜெயராமன் எழுதிய கட்டுரையும் இடம்பெற்று இருக்கிறது.
கடந்த மாதம் இரு விஷயங்கள் நாட்டின் கவனத்தை பெற்றது. ஆந்திராவில் நடைபெற்ற வன்புணர்வு குற்றவாளிகள் மீதான என்கவுண்டர், கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்ட உன்னாவ் பெண்ணுக்கு கிடைக்காத நீதி. இதை ஒட்டி தோழர் பாரதி, வன்புணர்வு தேசம் என்ற கட்டுரையை எழுதி இருக்கிறார்.
குழந்தைகள் செயல்பாட்டாளர் இனியனின் தொடர், இந்த தடவை குழந்தைகள் உறவுகளை கையாளும் விதம் குறித்து முக்கியமான ஒரு விஷயத்தை தொட்டு எழுதி இருக்கிறார். நான் திருவாளர் பொதுஜனம் என்ற ராஜராஜனின் கவிதை ஒன்றும் இடம்பெற்று இருக்கிறது.