வணக்கம்.
திராவிட வாசிப்பு மின்னிதழின் 14 வது இதழ் இது. இம்மாத இதழை அறிவியல் சிறப்பிதழாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த இதழில் அறிவியல் சார்ந்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. அறிவியல் என்பது மிகப் பரந்த தளம். அதில், சிறுதுளியையே இந்த இதழ் வெளிக்கொணர்ந்து இருக்கிறது. ஆனால், அறிவியலின் தேவையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்தே இருக்கிறோம். இந்த இதழோடு நின்றுவிடாமல், இனி தொடர்ந்து அறிவியல் சார்ந்த விசயங்களை வெளியிட ஆர்வமாக உள்ளோம்.
இந்த இதழில் இன்னும் சில, அரசியல் – சமூகம் சார்ந்த கட்டுரைகளும் இருக்கின்றன. அவற்றையும் வாசித்து உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும்.
ஒரு அறிவுசார் சமூகத்தை நோக்கி நம் பயணம் தொடரட்டும்!
இந்த இதழுக்கு முதல் கட்டுரையை தந்தவர் குரு Mariano Anto Bruno. அறிவியலையும் கலையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் அற்புதமான கட்டுரை அது. ஒரு பள்ளி மாணவனுக்கும் புரியும் வண்ணம் அவர் பாணியில் எழுதி இருப்பது சிறப்பு. அடுத்ததாக, மருத்துவர் சென் பாலன், பெரியாரின் அறிவியல் பார்வை என்ற கட்டுரையை தந்தார். அவர் பெரியார் வாசகர் வட்டத்தில் இதே தலைப்பில் பேசிக் கேட்டு இருக்கிறேன். அதையே சற்று விரிவாக அழகாக எழுதிதந்திருக்கிறார். முகநூலில் அறிமுகம் ஆனாலும், தொடர்ச்சியாக மிகநல்ல பதிவுகளை எழுதிவரும் மருத்துவர் அரவிந்த ராஜ் அவர்களை கேட்டவுடன், நிச்சயம் தருகிறேன் என ஒத்துக்கொண்டு, திருமணத்திற்கு தடையாக இருக்கும் சில மூடநம்பிக்கைகளை அறிவியல் பூர்வமாக விளக்கி இருக்கிறார். இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் நுண்ணியர்கள் குறித்து ஒரு எளிய அறிமுகத்தை Pushpalatha Poongodi எழுதித்தந்தார். மருத்துவர் Raiz Raiz அவர்களிடம் இருந்து இரண்டு பதிவுகள். முதலாவது அவர் அனுப்பி இருந்தார். இரண்டாவது அவர் எழுதிய சிறுகதை “தகுதி”, அதை வாசித்த உடனேயே அவரிடம் அனுமதி பெற்று அதையும் சேர்த்தாயிற்று. எனது பள்ளித்தோழரும் எழுத்தாளருமான Aruna Subramanian, தான் வாசித்த அறிவியல் புத்தகத்தில் இருந்து உணர்ந்தை, கவிதைகளாக மாற்றித்தந்தார். சுடச்சுட அதை வாசிக்க அத்தனை அருமையாக இருந்தது. அவரது, அறிமுகம் தான் எழுத்தாளர் ராம்பிரசாத். அவரின் “கடவுளை தேடி” சிறுகதையையும் இந்த இதழில் சேர்த்திருக்கிறோம். மிக அருமையான அறிவியல் புனைவு அது. MRI குறித்த விரிவான ஒரு கட்டுரையை தந்தார் முனைவர் அன்புச்செல்வன். வாசகர்களிடம் எழுதக்கேட்டு இருந்தோம். அறிவியல் சார்ந்த கட்டுரைகளை அனுப்பி இருந்தார்கள். அதையும் சேர்த்திருக்கிறோம். ஆச்சரியமாக Nithyanandam Vms அவர்கள் ஒரு அருமையான சிறு கட்டுரையை அனுப்பி இருந்தார். நான் மதிக்கும் திராவிட பற்றாளர்களில் ஒருவரான ஆசிப் நியாஜ் அவர்கள் குரான் குறித்தும் இஸ்லாம் குறித்தும் ஓர் நெடிய ஆய்வுக்கட்டுரையை எழுதித்தந்திருக்கிறார். அய்யா.பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் உரைகளில் மிக முக்கியமானது, அவரின் “ஆன்மிகமா, அறிவியலா?” சொற்பொழிவு. அதிலிருந்து முக்கிய பகுதிகளை இந்த இதழில் தந்திருக்கிறோம். திராவிட வாசிப்பை தொடர்ந்து வாசித்து ஊக்கம் தரும் Thamarai Selvi அவர்களிடம், கேட்டவுடனேயே “அறிவியல் – அரசியல் – பகுத்தறிவு” என்று அருமையான ஒரு கட்டுரையை தந்தார். அன்றாடம் வாழ்வில் பெரியாரியம் என்று எழுதிவரும் தொடரில், Kanimozhi MV அவர்கள் பெரியாரின் அறிவியல் சிந்தனைகளை தொட்டு எழுதி இருக்கிறார். குழந்தைகளும் நானும் தொடரில், குழந்தைகளும் கடிதங்களும் என்கிற அழகான உணர்வை பிரதிபலிக்கும் கட்டுரையை Eniyan Ramamoorthy தந்திருக்கிறார். தேர்தல் அரசியலும், இயக்க அரசியலும் என்கிற Bilal Aliyar அவர்களின் கட்டுரையும் இதில் இடம்பெற்றிருக்கிறது.
மொத்தத்தில், இந்த இதழ் ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை தரும் என நிச்சயம் சொல்லலாம்.