திருக்குறளுக்கு இன்னுமொரு உரை நூலா ? என்று எல்லோர் மனதிலும் தோன்றும் கேள்விக்கு விடை அளிப்பது தேவை.
திருக்குறளின் உரைநூல்களில் சிறந்ததாகப் பல காலம் கருதப்படுவது பரிமேலழகர் உரையே. ஆயினும் அந்த உரைநூல் தமிழ்ப் பண்பிற்கு இசைந்த, சரியான , உரையளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. அது உண்மையும் ஆகும். திருக்குறள் கருத்துக்களை திரித்து ஆரிய வேத மரபுக்கு உட்பட்ட உரையை அவர் அளித்துள்ளார்.
ஒரு மாதிரி : இம்மை என்ற சொல். இம்மைக்கு என்பது இன்னைக்கு என்பதன் மரூஉ. இதை மறுக்க முடியாது. ஆனால் இம்மை என்பதை இப்பிறவி என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர். இங்கே பிறவி என்ற பொருள் எப்படி வரும் ? இது திணிக்கப்பட்ட பொருள். இது போன்ற திரிபுகள் பல உள்ளன.
இந்தத் திரிபுகளை நீக்கி சில உரைகள் வந்துள்ளன. அவை முழுமையான திருத்தங்களை அளிக்கவில்லை. இந்த நூல் இந்தக் குறையை நீக்கும். பதிமூன்று ஆண்டுகள் உழைப்பில் இந்த நூல் இன்றைய வடிவம் பெற்றுள்ளது. இதில் குறட்பாக்கள் எதையும் திருத்தவில்லை.. இரண்டு மூன்று இடங்களில் சிறு மாறுபாடு செய்துள்ளேன். படிக்கும்போது உணரலாம். சொற்களின் பொருள் பல இடங்களில் தமிழ் லெக்சிகன் மூலம் பெறப்பட்டது என்பதை ஆங்காங்கே குறிப்பிடுகிறேன்.