சுயமரியாதைத் திருமணம் – தத்துவமும் வரலாறும் என்ற இந்த நூல் இப்போது ஆறாவது பதிப்பாக வெளிவருகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.
இந்தப் புதிய பதிப்பில் இதற்கு முந்தைய பதிப்புகளில் இடம்பெற வாய்ப்பில்லாத பல்வேறு இணைப்புகளும் இடம்பெற்றுள்ளன. புரட்சி மலர்ந்த சீனாவில் கூட 1948க்கு பிறகுதான் சடங்குகள் தவிர்த்த பெண்ணுரிமையை அங்கீகரித்த புதிய திருமணச் சட்டம் – செயலுக்கு வந்தது!
ஆனால், தந்தை பெரியார் அவர்களின் அரிய சிந்தனையின் விளைவான சுயமரியாதைத் திருமணம், அதற்கும் முந்தைய ஆண்டுகளுக்கு முன்பே செயலுக்கு வந்துவிட்டது. சுயமரியாதை திருமணம் என்பது வெறும் உயர்ஜாதி ஆதிக்கம் ஒழிந்த திருமணம் மட்டுமல்ல, ‘வாழ்க்கை ஒப்பந்தம்’ என்ற மணமக்கள் இருவருக்கும் – பகுத்தறிவு அடிப்படையில் சம உரிமையை வழங்கும் திருமணம் என்பதோடு, இத்திருமணம் என்ற வாழ்க்கை இணையேற்பு நிகழ்வுக்கு எம்மதத்தவரும், மதமல்லாத பகுத்தறிவாளர்களும் தலைமை தாங்கி நடத்தி வைக்கலாம். (வேறு ஒன்றுமில்லை இரண்டு சாட்சியங்கள் முன்னிலையில், மாலைமாற்றி ஒப்பந்தம் கூறுவதுதான் அல்லது ஒப்பந்த உரிமைகளை நண்பர்களாக பாவித்து ஏற்பதுதான்.)
இதன்மூலம் திருமணமுறை ஒரு மதஞ்சார்ந்த சடங்குகளின் தொகுப்பு என்ற கட்டுக்குள் இருந்து, விடுதலையாகி (Secularisation of Marriage system) உள்ளது.