1967-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூல், காமராசர் கொலை முயற்சி சரித்திரம் என்ற இந்நூல், அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர் களால் ஆணையிடப்பட்டு என்னால் தயாரிக்கப்பட்டுப் பல்லாயிரக்கணக்கில் விற்பனையான நூலாகும்.
மதிப்பிற்குரிய காமராசர் அவர்கள் பச்சை தமிழர், கல்வி வள்ளல், தமிழ்நாட்டின் ரட்சகர் என்று தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றவர். தமிழ்நாட்டில் 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார் காமராசர். அவர் காமராசர் திட்டம் (K-Plan) என்ற ஒரு திட்டத்தினைத் தந்தார் என்று பிரதமர் நேருவால் பாராட்டப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று கூறியதே அத்திட்டம். அதன்படிக் காமராசர் தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியைத் தானே துறந்தார்! அகில இந்திய காங்கிரசின் தலைவரானார். தந்தை பெரியார் அவர்கள் அவர் முதலமைச்சர் பதவியைவிட்டு வெளியேறக் கூடாது. அப்படிப் போவது தற்கொலைக்குச் சமம் என்று அவருக்கு அறிவுறுத்தித் தந்தி கொடுத்தார். அதனை ஏற்காது சென்ற காமராசர் பிறகு வருந்தினார். தில்லிக்குச் சென்று காமராசர் சம தர்மப் பாதையில் காங் கிரசை நடைபோட முயன்றது, பார்ப்பன, பனியா, வர்ணாசிரம வல்லாண் மையாளர் களுக்குப் பிடிக்கவில்லை.
பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்பதை இன்றைய பி.ஜே.பி. யின் அரசியல் கட்சியாக அன்றைக்கு பாரதிய ஜன சங்கம், ஆர்.எஸ்.எஸ்., சங்பரி வாரங்கள் இணைந்து நிர்வாணச் சாமியார்களை டெல்லித் தலைநகரில் கொண்டு வந்து நிறுத்தி, திரிசூலங்கள், ஈட்டிகள், தடிகள், கம்புகளுடன் கலவரங்கள், தீ வைப்புகளை நடத்தினர். பட்டப் பகலில் காமராசர் வீட்டுக்கே (தில்லியில்) தீ வைத்து அவரைக் கொல்லுவதற்கு முயன்றார்கள். அதுபற்றித் தந்தை பெரியாரும்,திராவிடர் கழகமும்தான் கொதித்தெழுந்து கண்டனம் தெரிவித்தார்கள். காங்கிரஸ் கட்சியும், ஆட்சியும்கூட அதுபற்றி அதிகமான கவலை அப்போது கொள்ளவில்லை. அதன் விளைவே இத்தொகுப்பு நூலாகும்.
காமராசர் வீட்டுக்கு டில்லியில் பட்டப் பகலில் தீ வைத்து அவரைக் கொல்ல முயன்றார்கள். ஆர்.எஸ்.எஸ். கூட்டம், காந்தியைக் கொன்ற கூட்டம். ஆர்.எஸ்.எஸ். , கோட்சே கும்பல் அம்பேத்கருக்கு பணியாள் மூலம் விஷம் வைத்துக் கொல்ல முயன்ற அமைப்பு. இவ்வமைப்பு, புதுடில்லிக்குச் சென்றிருந்த அன்றையத் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரையே தாக்க நேரிலேயே முண்டா உருட்டியவர்கள் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள். இவை யெல்லாம் மறக்க முடியாத ஆதாரங்கள்.
(குல) தர்மத்தைக் காக்கத் தண்டப் பிரயோகம் செய்வதும் தவறல்ல என்ற தத்துவவாதிகள் இவர்கள். முடிவு, முறைகளை நியாயப்படுத்தும் (Ends will justify the means) என்று தத்துவம் பேசும் வன்முறையின் வாரிசுகள் இவர்கள். இப்போது அப்படி ஏதும் நடைபெறவே இல்லை. காமராசரை நாங்கள் மிகவும் நேசிக்கிற வர்கள் என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைச் சொல்லுகிறார்கள் – எழுதுகிறார்கள். எடுத்துக்காட்டாக ஆர்.எஸ்.எஸ். நடத்தும் தமிழ் வார ஏடான விஜயபாரதம் (25-5-99 தேதியிட்ட) இதழில் பின்வருமாறு எழுதியிருக்கின்றார்கள்.