சிறுகதைகள்
ஒரே கல்லால் செய்யப்பட்ட மக்காச்சோளம் ஓயாமல் கனவில் வந்து பசியோடு விரட்டுகிறது. குறித்து வைத்த கனவை விரித்துப் பார்க்கும் போது ஒற்றை தேசம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை உணவுப் பழக்கம், ஒற்றை வழிபாடு என எல்லாமுமே ஒரே நிறத்தால் (காவியால்) நம் தேசத்தின் முகத்தில் அப்பித் தைக்கப்பட்டிருக்கின்றன. காவியூற்றி கறையாக்கப்பட்ட தேசத்தின் கோர முகத்தை பிய்த்தெறிய வேண்டியதன் அவசியமே ‘மக்காச்சோளக் கணவாய்’.
நீர் நிரம்பிய தண்ணீர்த் தொட்டியில் பூக்கள் மிதக்கின்றன. அதனுள்ளே படுத்துறங்கும் நண்பனொருவன் என் குரலைக் கேட்டதும் விழித்தெழுந்து மேலே வந்து நலம் விசாரிக்கிறான். நான் திகைப்புடன் உறக்கத்திலிருந்து விடுபட்டு அந்தக் கனவைக் குறித்து வைக்கிறேன். இரண்டு வருடங்கள் உள்ளே ஊறிய அந்தக் கனவுடன் மொழியரசியலைக் கலந்து ‘நீர்க் கடிதம்’ எழுதுகிறேன்.
என் மூத்த மகன் வண்ணப் பாம்பாய் உருமாறி பேருந்துச் சக்கரத்தில் நசுங்குகிறான். பக்கத்துக் குழியில் நெளியும் விதவிதமான பாம்புகளில் அவன் இருப்பானா எனப் பரிதவிக்கிறேன். அவன் கெஞ்சி அழத் தொடங்கியதும் ஒவ்வொரு பாம்பாய்த் தூக்கிப் பார்த்து அவன் அடையாளத்தைத் தேடுகிறேன். இளையமகனின் கைவிரல்கள் வெட்டுப்பட்டு வழியும் குருதியுடன் புகை பொசியும் சாலையில் கதறியபடி ஓடி வருகிறான். நான் அவனைக் கட்டியணைத்து ஓங்கிக் குரல் எடுத்து அழுகிறேன். அம்பானிகளும், அதானிகளும் மட்டுமே சுயதொழில் செய்ய அருகதை உள்ள நாட்டில், எளியவனின் தொழில் முயற்சிகள் துரோகச் சூழலாலும், இன்ன பிறவாலும் கருகிப் போக, ‘கனவுகள் மட்டும் பழுக்கக் காய்ச்சப்பட்ட கத்திகளாக’, என் உறக்கத்தினுள் செருகப்பட்டு, வாடகை வீட்டை விட்டும் விரட்டப்படுகிறேன்.
ஆடையில்லாக் கூடற் பொழுதில் நான் மரணிக்கிறேன். பொதுவீதியில் இந்தப் பிணத்தை எடுத்து வர அனுமதியோம் என்பவர்களின் ஆண்குறிகளைத் தன் கூந்தல் கற்றையால் சுருக்கிட்டு அறுத்து, ஆதிமனிதக் கழிவுகளின் புழுக்கலுக்கு இரையாக்கிப் போகிறாள் ஒரு சூலி. ‘உறைகடல் ஆகுதல்’ இப்படியானதொரு கனவின் நீட்சிதான்.
எனக்கு வரும் கனவுகள் வெறும் ஃபிராய்டிசச் சிக்கல்களால் வருபவை மட்டுமல்ல. இச்சமூகம் இடையறாது என்மேல் சொடுக்கும் சவுக்குகளால், கலைமனம் பிய்ந்து மனம் பிறழ்ந்த இரவுகளில் வருபவை…