நான் கல்லூரி படிக்கும் காலத்தில், அதற்கு பிறகு வெளியூர்களில் பணியாற்றிய காலத்தில் ஆண்டிமடம் பகுதி என்று சொன்னால் வித்தியாசமாகப் பார்ப்பார்கள். “நக்சல் பகுதி”, என்று சிம்பிளாக அழைப்பார்கள். அப்போது நடந்த சம்பவங்கள் குறித்து பொதுமக்களிடம் இருக்கும் பார்வைக்கும், அந்தப் பகுதியில் இருந்து அவற்றை நேரடியாக பார்த்தவன் என்ற வகையில் எனது பார்வைக்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு. அதனால், அதையே வேறு ஒரு பார்வையில் எழுதலாம் என முடிவெடுத்தேன். நக்சல்கள், தீவிரவாதிகள், தனித் தமிழ்நாடு கோரி போராடியவர்கள், போராளிகள் என பலப்பார்வைகளால் பார்க்கப்பட்டவர்களுக்கு இடையில் வாழ்ந்தவன் என்பதால் இது குறித்து பதிவு செய்ய விரும்பினேன். அதையே ஒரு புனைவாக எழுத ஆரம்பித்தேன். எல்லா சம்பவங்களையும் இணைக்கும் ஓர் மையப்புள்ளி தானாகக் கிடைத்தது. உண்மை சம்பவங்களோடு, அதன் பின்புற நிகழ்வுகளையும் இணைத்து தொகுத்திருக்கிறேன். படித்து கருத்து சொல்லுங்கள்.
அன்புடன்,
எஸ்.எஸ்.சிவசங்கர்.