ஒப்பாரும் மிக்காரும் இல்லாத சுய சிந்தனையாளர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்! ஏட்டுச் சுரைக்காய் கல்வியினால் உருவாக்கப்பட்டவர் அல்லர்; அவர் தன்னைத் தானே செதுக்கிக் கொண்ட இயற்கைத் தலைவர் – “மண்ணை மணந்த மணாளர்!”
“ஒரு பெரும் பணியை – லட்சியம் கருதி நாம் செய்ய முனையும்போது, அதில் வெற்றியா? தோல்வியா? என்று சீர் தூக்கிப் பார்க்காமல், அது செய்யப்பட வேண்டிய பணியா அல்லவா என்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்து, தனது லட்சியப் பயணத்தைத் தொடர வேண்டும்” என்று இலக்கணம் வகுத்தவர்.
செருப்புவீச்சு, அழுகியமுட்டை முதல் மலம், சாணி, கல்வீச்சு எல்லாம் அவர் அந்நாளில் சந்தித்த பூமாலைகள் – பொன்னாடைகள்!
அந்த – இழிவுகளை தன்னாடையில் துடைத்துக் கொண்டு, நிறுத்தாமல் தன் தொண்டறத்தைத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டு தந்த தன்னிகரில்லாத் தத்துவத் தலைவர் தந்தை பெரியார்!
அவர்தம் ஜாதி ஒழிப்புச் சிந்தனைகள் – செயல் திட்டங்கள் – ஒரே தொகுப்பில் – சுயமரியாதைச் சூளுரைகளாகத் திரட்டப்பட்டுள்ள இந்நூல் ஒரு அறிவுக் கருவூலம், தெவிட்டாத சிந்தனைத் தேனமுது! படியுங்கள்!