தந்தை பெரியார் உருவாக்கிய, உலகின் தலைசிறந்த இயக்கமாம் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய போர்க் கருவிதான் – அறிவாயுதம்தான் பச்சை அட்டை குடிஅரசு என்று அக்காலத்தில் 1925 முதல் தொடங்கிய புதுயுகத்தில் மக்களால் அழைக்கப்பட்டதாகும்.
குடிஅரசு என்பது அறிவை விரிவு செய்து, அகண்டமாக்கி, விசாலப் பார்வையால் விழுங்கி வெளிவந்த ஒளிக்கதிர்! ஓய்வறியா போர் வீரரான தலைவர் தந்தை பெரியார்தம் முனை மழுங்காத பகுத்தறிவு ஆயுதம்!!
திராவிடரின், தமிழரின் குருட்டுத்தனம் தொடர்ந்து கோலோச்ச விடாது விரட்டுவதற்குப் பயன்பட்ட விவேக முரசாகக் கிளம்பியதே குடிஅரசு வார ஏடு.
அது செய்த அறிவுப்புரட்சியால் அகிலமே அரண்டது! புதுமையாளர்கள் பூரித்தனர்!!
பழைமைப் பூமியைப் புரட்டிப் போட்ட புதிய பூகம்பாய், தூங்கிக் கிடந்த மக்களைத் துறைதோறும் துறைதோறும் தட்டியெழுப்பி, அங்கே சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்று சொல்லிக் கொடுக்கும் ஆசானாகி, அது வரலாறு படைத்தது!